தென்னிந்திய தேயிலைத் தோட்ட அதிபா்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உபாசியின் நூற்றாண்டு மலரை வெளியிட்டு சிறப்புறையாற்றினார்…
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், ஆராய்ச்சி, தர மேம்பாடு, பிராண்டிங் மற்றும் தொழிலாளர் நலனில் அதிக கவனம் செலுத்தி உலக சந்தையில் இந்திய தேயிலையின் பங்கினை உயர்த்த வேண்டும் என இந்திய குடியரசு துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்தியாவின் சிறு மற்றும் பெரிய தோட்ட உரிமையாளர்களுக்கு உபாசி கடந்த 100 ஆண்டுகளாக ஆற்றிய சேவையை பாராட்டினார். உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளர்களில் இந்தியா ஒன்றாக இருந்தாலும், உற்பத்தி மட்டுமன்றி தரமான தயாரிப்பு, மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தலிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தேயிலைத் துறையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை நினைவுகூர்ந்த அவர், 22 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி பகுதியில் பசுந்தேயிலை விலை சரிந்த நிலையில், அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை அணுகி குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற்றதாக தெரிவித்தார். மேலும், மாநில அளவில் தேயிலை நுகர்வை அதிகரிக்க ரேஷன் கடைகள் வழியாக தேயிலை வழங்கும் திட்டத்தையும் வலியுறுத்தியதாக கூறினார்.
உலக சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்திய தேயிலைக்கு கடும் போட்டி அளித்து வருவதாக தெரிவித்தார். எனவே உற்பத்திச் செலவைக் குறைத்தல், தரத்தை மேம்படுத்தல், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் தோட்டக்காரர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக உபாசி தனது ஆராய்ச்சிப் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

இந்திய தேயிலைத் துறை மொத்த விற்பனை வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சர்வதேச அளவில் அறியப்படும் வலுவான பிராண்டுகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பிராண்டிங் மூலம் அதிக மதிப்பும், உயர்ந்த விலையும், நிலையான சந்தையும் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
நூற்றாண்டு ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், நான்கு மாநிலங்களிலும் குறைந்தது ஒரு இடத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை வசதிகளுடன் கூடிய சுகாதார மையங்களை அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
தொழிலாளர் நலனும் தொழில் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை என வலியுறுத்திய அவர், “தொழிலாளர்கள் இல்லையெனில் தொழில் இல்லை; தொழில் இல்லையெனில் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. இருவரது நலனும் இணைந்து வளர வேண்டும்” என்றார்.
தேயிலை வாரியம், வாணிப அமைச்சகம் உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக உபாசி மற்றும் தோட்டத் துறையினர் ஒருங்கிணைந்த, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அரசுகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளர்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய நுகர்வு சந்தையையும் கொண்ட நாடாக இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய தேயிலையை உலக சந்தையில் முன்னணி இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.
விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், ஊட்டி எம்எல்ஏ போஜராஜன், உபாசி தலைவர் அஜய் திப்பய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.