நீலகிரி மாவட்டம், மாயார் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தெங்குமரடா பழங்குடியின கிராமத்தில், ஊட்டி ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் வேதியியல் துறை மற்றும் மக்களுக்காக அறக்கட்டளை சார்பில், பழங்குடியின பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பநிலை கண்டறிதல் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஆதரவுடன், ‘பிங்க் ஹோப் – பழங்குடியின பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பநிலை கண்டறிதல்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரம்பநிலை கண்டறிதலின் அவசியம்
நிகழ்ச்சிக்கு ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, தொலைதூர மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின பெண்களிடையே நோய்த்தடுப்பு மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தையும், மார்பகப் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
முன்னதாக, மருந்தியல் வேதியியல் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் ஆர். காளிராஜன் வரவேற்புரையாற்றினார்.
பெண்களுக்கு விழிப்புணர்வு
சிறப்பு கருத்தாளராகக் கலந்துகொண்ட ஊட்டி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் பி. கனகாம்பாள், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும், ஊட்டி அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் ஜி. சரவணன், ஊட்டி ஆனந்த் பல் மருத்துவமனை பல் மருத்துவர் டாக்டர் அனுஷா சர்தேசாய் ஆகியோரும் விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.
100 பேருக்கு பரிசுத் தொகுப்புகள்
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களுக்கு 100 பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும், 200 பேருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி உதவிப் பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புச் செயலாளருமான டாக்டர் கோமதி சுவாமிநாதன், மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் தமிழ் வெங்கடேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
உதவிப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகாந்த் ஜுபுடி நன்றியுரையாற்றினார். கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாகப் பங்கேற்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
கிராம மக்கள் பாராட்டு
போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகளை எளிதில் பெற முடியாத தொலைதூர பழங்குடியின கிராமமான தெங்குமரஹாடாவில், பெண்களின் உடல்நலப் பாதுகாப்பை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கிராம மக்கள் மற்றும் ஊராட்சித் தலைவர் எம். சுகுணா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
பழங்குடியின பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியத்தை உணர்த்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.