காஞ்சிபுரம் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முப்பெரும் விழா செப்டம்பர் 30-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் தலைவரும்,முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமான பொன். கலையரசன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சென்னை வேப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஏழை, எளிய மக்களுக்கு கல்விச் சேவையாற்றி வரும் இந்த அறக்கட்டளையின் கீழ், காஞ்சிபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழா,மாணவர் கூட்டுறவு அங்காடி திறப்பு விழா மற்றும் புதிய கலையரங்கம் திறப்பு விழா என மூன்று நிகழ்வுகள் ஒருங்கிணைந்து நடைபெற்றன.
விழாவில் பேசிய பொன்.கலையரசன்,தாம் பொறுப்பேற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்லூரி வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் கல்விக் கட்டணச் சலுகைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில் அறங்காவலர்கள் வி.சந்திரசேகர் ஐஏஎஸ், எஸ். சாத்தப்பிள்ளை,டாக்டர் ஆர். கண்ணையன், எஸ்.ரேணுகா, எச்.வெங்கடேசன்,டாக்டர் பி. அரிஸ்டாட்டில், எம்.ராஜேந்திரன், எம். என்.விஜயசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜி.மலர்விழி கலந்துகொண்டு, கூட்டுறவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், தொழில்நுட்ப ஆலோசகர் கே.ஜெகநாதன்,கல்வி ஆலோசகர் டாக்டர் கே.மின்ராஜ், அறக்கட்டளை செயலர் எம். நாகேஸ்வரி உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
கல்லூரி இயக்குநர் டாக்டர் எம். அருளரசு மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பழனிசாமி ஆகியோர் விழாவை வழிநடத்தினர். டாக்டர் கே.சுரேஷ்குமார் மற்றும் டாக்டர் ஏ.கே.ஞானசேகரன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,
பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.