திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு நலத்திட்ட உதவியாக ஒரு பயனாளிக்கு எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயந்திரம் (Oil Extraction Unit) அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.
தேசிய உணவு எண்ணெய் இயக்க திட்டம்
தேசிய உணவு எண்ணெய் இயக்க திட்டம் 2025-26ன் கீழ் அறுவடைக்கு பிறகு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துதல் இனத்தில் ரூ.8,73,229 மதிப்பீட்டில் இந்த Oil Extraction Unit அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆணையை பயனாளிக்கு கலெக்டர் துர்காமூர்த்தி வழங்கினார்.
இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் எண்ணெய் வித்துக்களை நேரடியாக எண்ணெய்யாக பிழிந்தெடுத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்து கூடுதல் லாபம் பெற முடியும். இடைத்தரகர்கள் இன்றி நேரடி வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) கோவிந்தராசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.