தாராபுரத்தில் புதுமனை புகுவிழாவில் அம்மிக்கல் முதல் ஆலமரம் விழுதுகள் போல் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய தம்பதியினர்!

தாராபுரத்தில் புதுமனை புகுவிழாவில் அம்மிக்கல் முதல் ஆலமரம் விழுதுகள் போல் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய  தம்பதியினர்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதுமனை புகுவிழாவில், தமிழர்களின்  சமையல் முறை பண்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், தங்களது வீட்டில் பழங்காலப் பொருட்களைக் காட்சிப்படுத்தி தம்பதியினர் அசத்தியுள்ளனர்.


தாராபுரத்தைச் சேர்ந்த  எழில்குமார், பிரியவேணி தம்பதியினர் தங்களது ஜெயப்பிரியா  புதுமனை புகுவிழாவில் வீட்டின் சமையலறையில் அம்மிக்கல், ஆட்டாங்கல், உரல், உலக்கை மாட்டு வண்டி  மண்பாண்ட சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்களை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய நவீன காலத்தில்  பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் உபகரணங்களின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், அவற்றின் சிறப்பையும் தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறைகளையும் தங்களது இரு ஆண் குழந்தைகள் உள்ளிட்ட அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.


மேலும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஆலமர வடிவிலான அலங்காரத்தையும் அமைத்துள்ளனர். ஆலமரத்தின் கிளைகளில், “அன்பான துணை, குன்றாத வளமை, தொலையாத நீதி, கலையாத நட்பு, கலையாத கல்வி, பிணியற்ற உடல்” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. குடும்பங்கள் ஆலமரத்தைப் போன்று தலைமுறை தலைமுறையாக வளர்ந்து, அன்பு, ஒற்றுமை, கல்வி, நட்பு மற்றும் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை இந்த அலங்காரம் எடுத்துரைக்கிறது.
புதுமனை புகுவிழாவில் பாரம்பரிய முறைப்படி வழிபாடுகள் நடத்தி, பாரம்பரிய உணவு வகைகளுடன் விருந்தினர்களுக்கு விருந்தளித்து தம்பதியினர் தங்களது புதிய இல்லத்தைத் தொடங்கினர்.
நவீன வாழ்க்கை முறையிலும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில் தம்பதியினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இல்லத்திற்கு வரும் உறவினர்கள் பொதுமக்கள் அனைவரும் இமைகளுக்கு விருந்தாக காட்சிப்படுத்திய கலாச்சாரத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy