தர்மபுரி நல்லம்பள்ளி அருகே தார் சாலையை சேதப்படுத்தியதாக தனியார் கிரவல் குவாரி டிப்பர் லாரிகளை சிறைபிடித்து, கிராம மக்கள் போராட்டம்.

தர்மபுரி நல்லம்பள்ளி அருகே தார் சாலையை சேதப்படுத்தியதாக தனியார் கிரவல் குவாரி டிப்பர் லாரிகளை சிறைபிடித்து, கிராம மக்கள் போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தேவர்ஊத்துப்பள்ளம் கிராமத்தில், தனியார் கிரவல் மண் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மண் குவாரியில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பகல்-இரவாக 6 வீல், 10 வீல் கொண்ட டிப்பர் லாரிகள் மூலம் 500 லோடு முதல் 1000 லோடுகள் வரை நாள்தோறும், அதிகளவில் கிரவல் மண் லோடுடன், கிராமப்புற சாலை வழியாக, விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் தற்போது ஒரே மாதத்தில், கிரவல் மண் குவாரி செயல்படும் தேவர்ஊத்துப்பள்ளம் கிராமத்தில் இருந்து இருசன்கொட்டாய் வழியாக புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை இடையே உள்ள சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரையிலான கிராமப்புற தார் சாலை முழுவதும் ஆங்காங்கே பழுதாகி மண்சாலையாக மாறி,  குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. 
இச்சாலை வழியாக அரசு பேருந்துகள் மற்றும் விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் டிராக்டர்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழுதான சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். தார் சாலை முழுவதும் விரிசல் ஏற்பட்டு புழுதிசாலையாக மாறியிருப்பதால், சாலையை ஒட்டி உள்ள குடியிருப்பு மக்கள், சாலையோரத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணாக்கர்கள், பாதசாரிகள் வரை, சாலையில் எழும் மண் தூசியால், கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்ற பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமப்புற தார் சாலையை சேதம் ஏற்படுத்தியும்,
பள்ளிக் கல்லூரி நேரத்திலும், இடைவெளி இல்லாமல் டிப்பர் லாரிகளை இயக்கி வரும், தனியார் கிராவல் மண் குவாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்து இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தேவர்ஊத்துப்பள்ளம் கிராமத்தில் இருந்து ஆத்துக்கொட்டாய் கிராமம் வழியாக கிரவல் மண் லோடுடன் வந்த 5-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை கிராம மக்கள் இன்று சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக நடந்தது. எங்களது போராட்டம் மீது மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவிட்டால், தேவர்ஊத்துபள்ளம், இருசன்கொட்டாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, தனியார் கிரவல் மண் குவாரி முன் திரண்டு, அனுமதியை ரத்து செய்யும் வரை தொடர் தர்ணா போராட்டம் நடத்துவோம் என இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy